Published : 26 Aug 2023 06:55 AM
Last Updated : 26 Aug 2023 06:55 AM
பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக இன்று (சனிக்கிழமை) பெங்களூரு வருகிறார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஊடகங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையில், சந்திரயான் 3 விண்கலத்தில் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதை பாராட்டும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் 1000 பேருக்கு கர்நாடக அரசின் சார்பில் விழா எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக நேரடியாக இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு வருகிறார். ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கும் மோடியை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பாஜக தலைவர்கள் வரவேற்கின்றனர்.
சாலையில் பேரணி: காலை 6.30 மணியளவில் மோடி அங்கிருந்து பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணியாக செல்கிறார். அவரை வரவேற்பதற்காக 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாஜகவினர் சாலையின் இரு புறங்களிலும் நின்று மலர்களை தூவ திட்டமிட்டுள்ளனர். பீனியா அருகே மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்ற இருக்கிறார்.
பின்னர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளை தனித்தனியாக பாராட்டுகிறார். இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளை வாழ்த்தி உரையாற்றுகிறார். காலை 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT