Published : 03 Dec 2017 05:35 PM
Last Updated : 03 Dec 2017 05:35 PM
திருமலையில் காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்த ஜனவரி மாதம் முதல் 60 பேட்டரி கார்களை தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.
தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுவதால் திருமலையில் காற்று மாசு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் விரைவில் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்கும் ‘டயல் யுவர் இஓ’ என்ற நிகழ்ச்சி திருமலை அன்னமய்யா பவனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் இதைத் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், “திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தரிசனத்தில் பக்தர்களை ஸ்ரீவாரி சேவகர்கள் தள்ளுகின்றனர்” என ஹைதராபாத்தை சேர்ந்த லட்சுமி என்ற பக்தர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அனில் குமார் சிங்கால் பதில் அளித்தார்.
ஓங்கோலில் இருந்து மஸ்தான் வலி எனபவர் கூறும்போது, “நானும் எனது குடும்பத்தினரும் ஏழுமலையானின் தீவிர பக்தர்கள். ஆனால் நாங்கள் திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது, முஸ்லிம்கள் என்பதால் தங்கும் அறை வழங்க தேவஸ்தான ஊழியர் மறுத்துவிட்டார்” என புகார் தெரிவித்தார். இதற்கு “மாற்று மதத்தினர் திருமலைக்கு வர எந்தத் தடையும் இல்லை. நீங்கள் மீண்டும் வரும்போது அதேபோல நடந்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் தினமும் ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்தப் பணத்தை எண்ணுவதற்கு நவீன இயந்திரம் வாங்கப்படும் என்றும் அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
மேலும் இவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் சிலா தோரணம், சக்கரதீர்த்தம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது மிகப் பழமையான ‘சிலா தோரணம்’ உள்ள இடத்தை பக்தர்கள் காணும் வகையில் ‘வியூ பாயிண்ட்’ அமைக்குமாறு சிங்கால் உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஏழுமலையானை தரிசித்த பக்தர்களுக்கு 79,34,652 லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 20,55,952 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT