Published : 25 Aug 2023 05:42 AM
Last Updated : 25 Aug 2023 05:42 AM

‘விண்வெளியின் சூப்பர் பவர் இந்தியா' - சர்வதேச ஊடகங்கள் புகழாரம்

புதுடெல்லி: 'விண்வெளியின் சூப்பர் பவர் இந்தியா' என்று சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

நிலவின் தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக சர்வதேச ஊடகங்கள் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “நிலவில் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்துள்ளது. சந்திரயான் -3 திட்ட வெற்றியால் விண்வெளிதுறையில் அடுத்த அத்தியாயத்தை இந்தியா தொடங்கி உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “நிலவில் விண்கலத்தை தரையிறங்கிய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது" என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், “நிலவின் தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பிபிசி வெளியிட்ட செய்தியில், “நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து இந்தியா வரலாறு படைத்திருக்கிறது" என்று கூறியுள்ளது. இங்கிலாந்தின் தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “நிலவின் தென்துருவத்தில் முதல்நாடாக இந்தியா கால் பதித்துள்ளது" என்று புகழாரம் சூட்டியுள்ளது.

கத்தார் தொலைக்காட்சி சேனலான அல்ஜெசீரா வெளியிட்ட செய்தியில், “விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தனது இடத்தை தக்க வைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தி ஸ்டார் நாளிதழ், பாகிஸ்தானை சேர்ந்த டாண், டிரிபியூன் உள்ளிட்ட ஊடகங்கள் இந்தியாவின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள், மின்னணு ஊடகங்கள், “விண்வெளியின் சூப்பர் பவராக இந்தியா உருவெடுத்திருக்கிறது'’ என்று புகழாரம் சூட்டியுள்ளன.

செய்தியை படித்த மோடி: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். அந்த நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழான தி ஸ்டாரின் முதல் பக்கத்தில் சந்திரயான் -3 குறித்த செய்தி, தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டு இருந்தது. தி ஸ்டார் நாளிதழ் செய்தியை பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமுடன் படித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x