Published : 25 Aug 2023 07:57 AM
Last Updated : 25 Aug 2023 07:57 AM
பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது. இதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறையிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு தினமும் 10 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
நேற்று கர்நாடக அரசு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 11,788 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 4,138 கன அடி நீரும் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில விவசாய சங்கத்தினர் மண்டியாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாய சங்க தலைவர் குர்பூர் சாந்தகுமார், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் முக்கிய மந்திரி சந்துரு உள்பட நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.
இதனிடையே கிருஷ்ணராஜசாகர் அணை அமைந்துள்ள ஸ்ரீரங்கபட்ணாவில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரை உடனடியாக நிறுத்துமாறு முழக்கம் எழுப்பினர். போராட்டக்காரர்களை போலீஸார் ஆற்றில் இருந்து தூக்கி சென்று கைது செய்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு பதில் மனு: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய தனி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் மனுவுக்கு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT