Published : 07 Dec 2017 10:09 AM
Last Updated : 07 Dec 2017 10:09 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெடி மருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருப்பதியிலிருந்து திருமலைக்கு சிகரெட், பீடி, குட்கா, மதுபானம், மாமிசம் ஆகியவற்றை கொண்டு செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால், ஆயுதங்கள், வெடிமருந்து பொருட்கள், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வட இந்தியாவைச் சேர்ந்த சில பக்தர்கள் வந்த வேனை, அலிபிரி சோதனைச் சாவடி ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பாதுகாப்பு கருதி துப்பாக்கிகளை கொண்டுவந்ததாக தெரிவித்தனர்.
எனவே, வெளி மாநிலங்களில் இருந்து திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெடி மருந்துகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை திருமலைக்கு கொண்டு செல்வதைத் தடுக்க, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
திருக்கல்யாணம்
திருப்பதியில் உள்ள சீதா தேவி சமேத கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாண சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலையில் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் சீதா தேவி, ஸ்ரீராமருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலையில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT