Published : 24 Aug 2023 05:28 PM
Last Updated : 24 Aug 2023 05:28 PM

“இறுதியில் எங்கள் கனவு நனவானது!” - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நெகிழ்ச்சி

பெங்களூரு: சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்திருப்பதன் மூலம் தங்களின் கனவு நனவாகிவிட்டதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் மிகழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

சந்திரயான்-2 திட்டம் கடந்த 2019-ல் செயல்படுத்தப்பட்டபோது இஸ்ரோ தலைவராக இருந்தவர் கே.சிவன். சந்திரயான்-2 நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்ட 2019, செப்டம்பர் 7ம் தேதி பிரதமர் மோடி உள்ளிட்டோர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் கூடி இருந்தனர். சந்திரயான்-2 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என எண்ணியிருந்த நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தை மென்மையாக தரையிறக்குவதில் ஏற்பட்ட தவறு காரணமாக அந்தத் திட்டம் அப்போது வெற்றி பெறவில்லை.

சந்திரயான்-2 திட்டம் வெற்றி பெறாததை அறிந்து இஸ்ரோ தலைவர் சிவன் கண்களங்கினார். அப்போது, அருகில் இருந்த பிரதமர் மோடி அவரை அணைத்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்தியா உங்களோடு இருக்கிறது. இன்றைய தவறில் இருந்து பாடம் கற்று இன்னும் சிறப்பாக விண்வெளித் துறையில் வெற்றி நடை போடுவோம் என குறிப்பிட்டார்.

சந்திரயான்-2 தோல்வியை அடுத்து, உடனடியாக சந்திரயான்-3 திட்டத்துக்கான அறிவிப்பு 2019-ம் ஆண்டே வெளியாகி, பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நேற்று நிலவில் தரையிறங்கும் நிகழ்வைக் காண பெங்களூரவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு வந்த கே.சிவன், அனைத்து நிகழ்வுகளையும் சக விஞ்ஞானிகளோடு சேர்ந்து பார்வையிட்டார்.

இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.சிவன், "லேண்டர் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்தே நாங்கள் திரையை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருந்தோம். இம்முறை நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தோம். வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் நான் பிரார்த்திக் கொண்டே இருந்தேன். இறுதியில் எங்கள் பிரார்த்தனை பலித்துவிட்டது.

லேண்டர் தரையிறங்கியதும் நான் அங்கிருந்து புறப்படவில்லை. லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து, நிலவில் ஊர்ந்து செல்லும் வரை கட்டுப்பாட்டு அறையில்தான் இருந்தேன். ரோவர் தனது பணியை மேற்கொள்ளத் தொடங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே நள்ளிரவில் வீடு திரும்பினேன்.

இந்த வெற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டியது. சந்திரயான்-2-ல் ஏற்பட்ட சிறிய தவறு காரணமாக அது வெற்றி பெறவில்லை. அது என்ன தவறு என்பதை அப்போதே கண்டறிந்து கொண்டோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம். தவறுகளில் இருந்து பாடம் கற்பது மிக மிக முக்கியம். சந்திரயான்-3 குறித்து 2019-ம் ஆண்டே திட்டமிட்டோம். அதற்கான பணிகளையும் 2019-ம் ஆண்டே தொடங்கினோம். அதில் இருந்தே வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இம்முறை அனைத்தையும் சரியாக செய்தோம். நாங்கள் கொடுத்த உழைப்புக்கான பலனை நேற்று நாங்கள் பார்த்தோம்" என மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x