Published : 24 Aug 2023 08:19 AM
Last Updated : 24 Aug 2023 08:19 AM
ஜோகன்னஸ்பர்க்: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இஸ்ரோ விரைவில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் என்று தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 15-வது உச்சி மாநாடு கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். மாநாட்டு நிகழ்ச்சிகளில் அவர் நேற்று பங்கேற்றார். இதன் நடுவே, நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை நேரலையில் பிரதமர் மோடி பார்த்தார். அப்போது, தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து, காணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், என் இதயம் எப்போதும் சந்திரயான் விண்கலம் திட்டத்துடனேயே இருந்தது. இந்தியா இப்போது நிலவில் கால் பதித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைத்துள்ள இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரையிறக்க முடியவில்லை. இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது. இது நிலா பற்றிய அனைத்து கதைகளையும் மாற்றும். இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய இந்தியா உதயமாகி இருக்கிறது. இது விலைமதிப்பு இல்லாத தருணம்; இதுவரை சந்தித்திராத தருணம். நாம் புதிய இந்தியாவுக்கான வெற்றி கோஷம் எழுப்ப வேண்டிய தருணம். 140 கோடி இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம்.
இந்தியாவுக்கு புதிய ஆற்றலும் புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்கு ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தை இஸ்ரோ அனுப்பும். இதுபோல மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம், வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தையும் இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தும்.
ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற நம்முடைய அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. மனிதனை மையமாக கொண்ட இந்த அணுகுமுறை சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நமது சந்திரயான் திட்டமும் இந்த அணுகுமுறையை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உரித்தானது. இது பிற நாடுகளின் எதிர்கால நிலவு திட்டங்களுக்கு உதவும். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் திறமையால், நிலவின் தென்துருவத்தில் இந்தியா தற்போது கால் பதித்துள்ளது.
அடுத்த தலைமுறையினருக்கான கதைகள், கட்டுக்கதைகள், நிகழ்வுகள் இனி மாறும். நிலா வெகுதூரத்தில் இருப்பதாக குழந்தைகளுக்கு கதை கூறி வந்தார்கள். நிலா சுற்றுலா செல்லும் தூரத்தில்தான் உள்ளது என இனிவரும் குழந்தைகள் சொல்வார்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT