Published : 24 Aug 2023 08:17 AM
Last Updated : 24 Aug 2023 08:17 AM
புதுடெல்லி: அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலங்களை பத்திரமாக தரையிறக்கி சாதனை புரிந்துள்ளன. இந்நிலையில், சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததன் மூலம் இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனால், தென் துருவத்தில் எந்த விண்கலமும் தரையிறங்கியதி்ல்லை. இந்நிலையில், இந்தியா முதல் முறையாக இப்பகுதியில் விக்ரம் லேண்டரை பத்திரமாக தரையிறக்கி உள்ளது. இதையடுத்து மேலும் சில நாடுகள் இப்பகுதிக்கு விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளன.
நிலவில் எந்த ஒரு நாட்டின் விண்கலமும் கால் பதிக்காத நிலையில், நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த 1960-களின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனிடையே, 1961 முதல் 1972 வரை அமெரிக்காவின் நாசா, அப்போலோ என்ற பெயரில் பல விண்கலங்களை அடுத்தடுத்து நிலவுக்கு அனுப்பியது. இதன் மூலம் அங்கிருந்த மண் மாதிரியை எடுத்துவந்து ஆய்வு செய்ததில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி இல்லை என தெரியவந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு அந்த மண் மாதிரிகளை பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் ஆய்வு செய்தனர். இதில் சிறிய துகள்களுக்குள் ஹைட்ரஜன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் 2008-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த நாசாவின் கருவி, நிலவின் தரைப்பரப்பில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் நடத்திய மற்றொரு ஆய்வில் தரைப் பரப்புக்குக் கீழே தண்ணீர் பனிக்கட்டி இருப்பதாக நாசா தெரிவித்தது. 1998-ம் ஆண்டு அனுப்பிய லூனார் பிராஸ்பெக்டர் விண்கலமும் நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்தது.
பண்டைய தண்ணீர் படிமங்களில் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். ஏனெனில்,அவை நிலவின் எரிமலைகள், வால் நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்கள் பூமிக்கு வழங்கிய பொருட்கள் மற்றும் கடல்களின் தோற்றம்பற்றிய தகவலை வழங்கும் என கருதப்படுகிறது. நிலவில் தண்ணீர் பனிக்கட்டி இருந்தால், அது நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கான குடிநீர் ஆதாரமாக இருக்க முடியும். மேலும் ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கவும், சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உருவாக்கவும் இதைப் பயன்படுத்த முடியும்.
1967-ல் ஐ.நா. சபை மேற்கொண்ட விண்வெளி ஒப்பந்தம் நிலவுக்கு எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாடுவதை தடை செய்கிறது. ஆனால் வணிக நடைமுறைகளை தடுக்க எந்த விதிமுறையும் இல்லை. அமெரிக்காஉள்ளிட்ட நாடுகள் நிலவின் ஆராய்ச்சி தொடர்பாகவும் அதன் வளத்தை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஒரு கொள்கையை வகுத்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் 27 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை.
சிக்கலான தென் துருவம்: அப்போலோ உட்பட ஏற்கெனவே நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் தரையிறங்கிய பகுதியிலிருந்து தென்துருவம் மிகவும் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் பள்ளம் மற்றும் ஆழமான அகழிகள் உள்ளன. இதில் விண்கலத்தை தரையிறக்குவது மிகவும் சிரமம். இப்பகுதியை குறிவைத்து 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது. இதுபோல இதே பகுதியில் தரையிறங்க அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுந்து நொறுங்கியது. அடுத்தபடியாக அமெரிக்காவும் சீனாவும் தென்துருவத்துக்கு விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT