Published : 24 Aug 2023 09:01 AM
Last Updated : 24 Aug 2023 09:01 AM
அமெரிக்காவின் நாசா அமைப்பு பாராட்டு: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் பில் நெல்சன் நேற்று வெளியிட்ட ட்வீட்டில், “சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்!. மேலும், நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்றதற்காக இந்தியாவுக்கு பாராட்டுகள். இந்த திட்டப் பணியில் உங்களுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா வாழ்த்து: ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவமான ராஸ்கோஸ்மாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “ சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு வாழ்த்துகள். நிலவு குறித்த ஆய்வு மனிதகுலத்துக்கு மிக மிக்கியமானது. எதிர்கால ஆழமான விண்வெளி ஆய்வுகளுக்கு இந்த நிகழ்வு அடித்தளமாக அமையும்" என்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து விண்வெளி அமைப்பு பாராட்டு: இங்கிலாந்து விண்வெளி முகமையின் இயக்குநர் அனு ஓஜா கூறுகையில், “அற்புதமான பொறியியல் மற்றும் விடாமுயற்சியில் விளைந்த சாதனைக்காக இந்தியாவுக்கு பாராட்டுகள். சந்திரனில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியது ஒரு புதிய விண்வெளி யுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு மற்றொரு சான்றாகும். உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்கள் சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் தங்கள் பார்வையை விசாலமாக்க இந்தியாவின் இந்த சாதனை பெரிதும் உதவும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT