Published : 24 Aug 2023 09:11 AM
Last Updated : 24 Aug 2023 09:11 AM
சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,895 கிலோ எடை கொண்டது. இதில் லேண்டர், ரோவர், உந்துவிசை இயந்திரம் (Propulsion Module) ஆகிய 3 கலன்கள் இருந்தன.
உந்துவிசை கலன்: இதன் எடை 2,145 கிலோவாகும். இது லேண்டரை நிலவின் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்வது இதன் பணியாகும். அதன்படி தனது பணியை முடித்துவிட்ட உந்துவிசை கலன் அடுத்த ஓரிரு ஆண்டுகள் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். அதற்காக அந்த கலனில் ஷேப் எனும் ஆய்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த சாதனம் மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும். அதாவது, அந்த கதிர்களின் பிரதிபலிப்பைக் கொண்டு அங்கு கார்பன், ஆக்சிஜன் உள்ளதா என்பதைக் கண்டறிந்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை அறியலாம். எதிர்காலத்தில் பிற கோள்களிலும் இத்தகைய ஆய்வை நடத்தி அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் உள்ளதா என்பதை கண்டறிய உதவும்.
ரோவர்: ரோவர் வாகனம் தனது 6 சக்கரங்களின் உதவியுடன் நிலவில் குறிப்பிட்ட தூரம் வரை ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும். அதில் 2 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏபிக்ஸ்எக்ஸ் எனும் கருவி நிலவின் தரைப்பரப்பில் லேசர் கற்றைகளை செலுத்தி அதன்மூலம் வெளியாகும் ஆவியைக் கொண்டு மணல்தன்மையை ஆய்வு செய்யும். எல்ஐபிஎஸ் எனும் மற்றொரு கருவி ஆல்பா கதிர்கள் மூலம் தரை, பாறைப் பகுதிகளில் 10 செ.மீ வரை துளையிட்டு மெக்னிஷியம், அலுமினியம், சிலிகான் உள்ளிட்ட கனிமங்களைக் கண்டறியும். இது சேகரிக்கும் தகவல்களை லேண்டருக்கு அனுப்பும். மேலும், ரோவரின் பின்பக்க கால்களில் தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோவின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அவை நிலவில் இந்தியாவின் தடத்தை பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேண்டர்: நிலவில் தரையிறங்கிய லேண்டர் 1,750 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 14 நாட்கள். இதில் 3 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவில் மேற்பரப்பு வெப்பம், நில அதிர்வுகள், அயனி கூறுகள் உள்ளனவா என்பதை அந்த கருவிகள் பரிசோதிக்கும். நாசாவின் எல்ஆர்ஏ (லேசர் ரெட்ரோரிப்ளக்டர் அரே) எனும் மற்றொரு கருவி பிரதிபலிப்பான் தொழில்நுட்பத்தைக் கொண்டது. அது லேசர் கற்றைகளை பிரதிபலித்து புவிக்கும், நிலவுக்குமான தொலைவுகளை ஆய்வு செய்யும். மேலும், இதிலுள்ள முப்பரிமாண கேமராக்கள் நிலவை புதிய கோணங்களில் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும்.
சந்திரயான் வரலாறு: நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் வரிசையில் இதுவரை 3 விண்கலங்களை இஸ்ரோ அனுப்பியுள்ளது. முதலில் சென்ற சந்திரயான்-1 விண்கலத்தில் மொத்தம் 11 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றிருந்தன. அதில் 5 ஆய்வுக் கருவிகள் அமெரிக்கா, ஐரோப்பா கூட்டமைப்பு நாடுகளுக்கு சொந்தமானதாகும். 1,380 கிலோ எடை கொண்ட அந்த விண்கலன் பிஎஸ்எல்வி-சி 11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்து மீண்டும் சந்திரனை நோக்கிய ஆய்வுக்கு உலக நாடுகளை ஈர்த்தது.
அடுத்து அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் 3,850 கிலோ எடை கொண்டது. இந்த திட்டம் முழு வெற்றிபெறாவிட்டாலும் அதன் ஒருபகுதியான ஆர்பிட்டர் கலன் கடந்த 4 ஆண்டுகளாக நிலவை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சுற்றியதுடன் பல்வேறு அரிய புகைப்படங்களை நமக்கு அனுப்பியுள்ளது. அதன்மூலம் நிலவில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், பல்வேறு ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தற்போது நிலவில் இறங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலமும் தென்துருவத்தின் புலப்படாத ரகசியங்களையும் உலகுக்கு வெளிக்கொணரும் என்று அறிஞர்கள் உற்றுநோக்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT