Published : 29 Dec 2017 10:58 AM
Last Updated : 29 Dec 2017 10:58 AM
திருமலை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானின் தரிசனத்திற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று அதிகாலை 3525 விஐபி பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தது தேவஸ்தானம். காலை 8 மணி முதல் சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை சாதாரண நாட்களில் தரிசனம் செய்யவே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால், கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டத்தால் திருமலை திக்குமுக்காடுகிறது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை வந்ததால், இன்று காலை மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலை 5 மணிக்கு 3525 விஐபி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் மத்திய, மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், உச்சநீதி மன்ற நீதிபதிகள் உட்பட பல்வேறு மாநில நீதிபதிகள் ஏழுமலையானை தரிசித்தனர். இதனால் காலை 5 முதல் 8 மணி வரை சாமானிய பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, காலை 8 மணி முதல் சர்வ தரிசனம் மூலம் சாமானிய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், திவ்ய தரிசனம், ரூ. 300 சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், விஐபி சிபாரிசு கடிதங்களை தேவஸ்தானம் முழுமையாக ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள நாராயணகிரி, கோகர்பம் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக 6 கி.மீ தொலைவிற்கு தற்காலிக க்யூ லைன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தரிசனம் செய்யும் பக்தர்கள், நேற்று காலை 10 மணியிலிருந்தே வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்களில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு 30 மணி நேரத்திற்கு பின்னரே தரிசனம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், பக்தர்களுக்குத் தேவையான இலவச உணவு, குடிநீர், சிற்றுண்டி, போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT