Published : 23 Aug 2023 04:17 PM
Last Updated : 23 Aug 2023 04:17 PM
புதுடெல்லி: சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது. மாலை 6 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, தரையிறக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு லேண்டர் வருவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 5.44 மணிக்கு தரையிறக்கப்பட வேண்டிய இடத்திற்கு லேண்டர் வந்துவிடும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, தானியங்கி முறையில் தரையிறக்குவதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றதும் லேண்டர் தரையிறக்கப்படும் என்று கூறியுள்ளது. லேண்டர் தரையிறக்கப்பட்ட உடன் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சந்திரயான்-3 திட்டத்தின் குழு தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறக்கப்படுவதை மாலை 5.20 மணி முதல் நேரலையில் காணலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
"லேண்டரை மிதமான முறையில் தரையிறக்குவது மிகப் பெரிய சவால். இதை சரியாகச் செய்வதற்கு இஸ்ரோ தயாராக உள்ளது. சந்திரயான்-2ல் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு அதுபோன்ற சிக்கல் ஏற்படாத வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று பெங்களூருவில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 லேண்டர் பத்திரமாக தரையிறங்கவும், இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றி பெறவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள குருத்வாராவில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டனர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என்பதற்காக சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சந்திரயான்-3ன் வெற்றிக்காக நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மசூதி ஒன்றில் சந்திரயான்-3ன் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல், நாட்டின் பல்வேறு இடங்களிலும் கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT