Published : 23 Aug 2023 06:36 AM
Last Updated : 23 Aug 2023 06:36 AM
சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணி அளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குகிறது.
நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.
இந்நிலையில், திட்டமிட்டபடி லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலவுக்கு அருகே 25 கி.மீ உயரத்துக்கு லேண்டர் வந்ததும் எதிர்விசையை பயன்
படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும். அதன்மூலம் தரைப் பகுதிக்கும், லேண்டருக்குமான உயரம் படிப்படியாக குறையும். தரையில் இருந்து 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்படும். அதில் உள்ள சென்சார்கள் மூலம், தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தேர்வு செய்யப்படும்.
லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மெதுவாக தரையிறங்கும். லேண்டர் தரையிறங்கிய 3 மணி நேரத்துக்கு பிறகு, அதில் வைக்கப்பட்டுள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ளும்.
இன்று அரங்கேற உள்ள இந்த நிகழ்வை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன. சமீபத்தில் நிலவில் தரையிறங்கும்போது ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கிய நிலையில், சந்திரயானின் பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
சந்திரயான்-2 பயணத்தின்போது, நிலவில் வேகமாக தரையிறங்கியதால், லேண்டர் செயலிழந்தது. இந்த முறை லேண்டரின் கால்கள் மிகவும் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேடு, பள்ளம் நிறைந்த நிலவில் சமதளப் பரப்பை கண்டறிந்து தரையிறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கார் வேகத்தை கட்டுப்படுத்தும் லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் (எல்விடி) தொழில்நுட்பம், லேண்டரில் உள்ளது. எனவே, இந்த முறை வெற்றி உறுதி என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
நேரலையில் காணலாம்: லேண்டர் இன்று தரையிறங்கும் நிகழ்வை https://isro.gov.in என்ற இணையதளம், https://youtube.com/watch?v=DLA_64yz8Ss என்ற யூ-டியூப் பக்கம், https://facebook.com/ISRO என்ற முகநூல் பக்கம், டிடி நேஷனல் தொலைக்காட்சி ஆகியவற்றில் இன்று மாலை 5.20 மணியில் இருந்து பொதுமக்கள் காணலாம்.
நிலவில் ஒருவேளை சூழல் சாதகமாக இல்லாவிட்டால் ஆக.27-ல் லேண்டர் தரையிறங்கும் என அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநர் நிலேஷ் எம்.தேசாய் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT