Published : 23 Aug 2023 08:06 AM
Last Updated : 23 Aug 2023 08:06 AM

வங்கிகளிடமிருந்து ரூ.4,760 கோடி கடன்பெற்று மோசடி: ஜிடிஎல் நிறுவனம், 13 வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மும்பை: வங்கிகளிடமிருந்து கடன்பெற்று முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜிடிஎல் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மீதும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உட்பட 13 வங்கிகளின் அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜிடிஎல் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனம், தொலைத் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 27,729 செல்போன் கோபுரங்களை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் 2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று ரூ.4,760 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிறுவனம் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை, முறையாகப் பயன்படுத்தாமல், போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நி்றுவனம் வங்கிகளிடம் வாங்கிய கடனை, நிறுவன செயல்பாடுகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க செலவிட்டதாக தெரிவித்திருந்தது.

ஆனால், இந்நிறுவனம் குறிப்பிட்ட சில விநியோக நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கிய பொருட்களின் மதிப்பைவிடவும் கூடுதலாக பணம் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அந்த விநியோகநிறுவனங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதும், வங்கிகளில்இருந்து பெற்ற கடனை மடைமாற்றவே அந்த போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் உதவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மீண்டும் ஜிடிஎல் நிறுவனத்தின் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த 13 வங்கிகளின் அதிகாரிக்ள் மீதும்புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை, முறையாகப் பயன்படுத்தாமல், போலி நிறுவனம் மூலம் மடைமாற்றி இருப்பது தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x