Published : 23 Aug 2023 08:14 AM
Last Updated : 23 Aug 2023 08:14 AM
புதுடெல்லி: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவைச் சேர்ந்தவர் சோனியா அக்தர். இவர் தனது குழந்தையுடன் அண்மையில் நொய்டாவுக்கு வந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் மத்திய நொய்டா பகுதி அருகே சூரஜ்புரில் வசிக்கும் தனது கணவர் சவுரவ் காந்த் திவாரியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று நொய்டா மகளிர் போலீஸில் சோனியா புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சோனியா அக்தர் கூறியதாவது: வங்கதேசத்தில் வேலை பார்த்தபோது சவுரவ் காந்துடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அங்கு முஸ்லிம் மதப்படி திருமணம் செய்து கொண்டோம். 2 வருடம் ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் எனது கணவர் சவுரவ் காந்த் இந்தியாவுக்கு வந்துவிட்டார். இப்போது என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. என்னை ஏமாற்றி அவர் திருமணம் செய்துள்ளார்.
நான் வங்கதேசத்தைச் சேர்ந்தவள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். என் கணவருடன் வாழ ஆசைப்படுகிறேன். எனவே, என்னை அவருடன் சேர்த்து வையுங்கள். என்னையும், என் குழந்தையின் நிலையையும் பார்த்து போலீஸார் எனக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மத்திய நொய்டா கூடுதல் போலீஸ் இணை கமிஷனர் ராஜீவ் தீக்சித் கூறும்போது, “சவுரவ் காந்த் திருமணம் செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டதாக வங்கதேச பெண் புகார் கொடுத்துள்ளார்.இந்த வழக்கை கூடுதல் உதவி போலீல் கமிஷனர் (மகளிர் மற்றும் குழந்தை பாதுகாப்பு) விசாரிப்பார்" என்றார்.
சவுரவ் காந்த் திவாரி, டாக்காவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 2017 ஜனவரி 4-ம் தேதி முதல் 2021 டிசம்பர் 24-ம் தேதி வரை வேலை பார்த்துள்ளார். அவர்களுக்கு 2021 ஏப்ரல் 14-ம்தேதி முஸ்லிம் முறைப்படி திருமணமாகியுள்ளது. அவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.
மேலும், சவுரவ் காந்துக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT