Published : 23 Aug 2023 10:14 AM
Last Updated : 23 Aug 2023 10:14 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வீடு இல்லாதவர்களுக்கு நிலம் கொடுப்பதை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதாகக் கூறி ஜம்மு காஷ்மீரில் குடியுரிமை இல்லாதவர்கள் குடியமர்த்தப்படுவதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்பான 3 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்ற துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது:
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டப் பயனாளிகள் எவருக்கேனும் சொந்த நிலம் இல்லாவிட்டால் அவர்களுக்கு 5 மர்லாஸ் (1,369 சதுர அடி) நிலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஜம்மு காஷ்மீரை சேராத ஒருவருக்கு கூட நிலமோ அல்லது வீடோ வழங்கப்பட்டதில்லை.
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதை தேசிய நீரோட்டத் தலைவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இங்கு 50 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு இவர்களே காரணம். இவர்கள் அமைதியை விரும்பவில்லை.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தெருக்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ளன. முன்பெல்லாம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மக்கள் வீடு திரும்பி விடுவார்கள்.
ஆனால் தற்போது இரவு 10 மணிக்கு பிறகும் உணவகங்கள், ஓட்டல்கள் திறந்துள்ளன. ஜீலம் நதிக்கரையில் முதியவர்களும் பொழுதை கழிப்பதை காண முடிகிறது. இதெல்லாம்தான் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT