Published : 22 Aug 2023 09:07 AM
Last Updated : 22 Aug 2023 09:07 AM
புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ (BRICS) எனப்படுகிறது. இதன் தலைமை பொறுப்பை தற்போது தென்னாப்பிரிக்கா வகிப்பதால், அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15-வது பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி24-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பயணம் தொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ஓர் அறிக்கையைப் பகிர்ந்தார். அதில் அவர், "இன்று (ஆகஸ்ட் 22) முதல் 24 வரை தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்கிறேன். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா அழைப்பை ஏற்று அங்கு நடைபெறவுள்ள 15-வது பிரிக்ஸ் மாநாட்டுக்காகச் செல்கிறேன்.
பிரிக்ஸ் கூட்டமைப்பானது உறுப்பு நாடுகள் மத்தியில் பல்வேறு துறைகளிலும் வலுவான கூட்டுறவை மேம்படுத்தி வருகிறது. 'பிரிக்ஸ்' ஒட்டுமொத்த தென் பிராந்தியத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு களமாக உருவாகியுள்ளது. இந்த மாநாடு பிரிக்ஸ் நாடுகள் வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்கு பயனுள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். தென் ஆப்பிரிக்கா பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நான் சில உலகத் தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவு குறித்து பேசவுள்ளேன்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிரீஸ் நாட்டுக்குச் செல்கிறேன். அந்நாட்டு பிரதமர் க்ரியாகோஸ் மிட்சோடகிஸ் அழைப்பை ஏற்று அங்கு செல்கிறேன். பழமையான கிரேக்க தேசத்துக்கு இது எனது முதல் பயணம். அதுமட்டுமல்லாது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரேக்கத்துக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் பெறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா வந்தடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமான நிலையத்தில் அதிபர் சிரில் ரமபோஸா வரவேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT