Published : 22 Aug 2023 06:47 AM
Last Updated : 22 Aug 2023 06:47 AM

துவாரகா விரைவு சாலை பொறியியல் அற்புதம்: வீடியோவை வெளியிட்டு நிதின் கட்கரி கருத்து

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி அருகே நிறுவப்பட்டு வரும் துவாரகா விரைவுச் சாலை ‘பொறியியல் அற்புதம்’ என குறிப்பிட்டு அது தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

டெல்லியின் துவாரகா மற்றும் ஹரியாணாவின் குருகிராம் நகரை இணைக்கும் வகையில் துவாரக விரைவுச் சாலை நிறுவப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 8-ல் ஷிவ் மூர்த்தி என்ற இடத்தில் தொடங்கும் இந்த சாலை, குருகிராமின் கெர்கி தவுலா சுங்கச் சாவடி வரை நீள்கிறது. இது நாட்டின் முதல் 8 வழி விரைவுச் சாலை ஆகும்.

இந்நிலையில், மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி துவாரகா விரைவுச் சாலை தொடர்பான ஒரு வீடியோவை எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “பொறியியல் அற்புதம்: தி துவாரகா எக்ஸ்பிரஸ்வே! எதிர்காலத்திற்கான அதிநவீன பயணம்” என்ற தலைப்பில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

27.6 கி.மீ. நீளம் கொண்ட இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால்,டெல்லி, குருகிராம் இடையிலான போக்குவரத்து நெரிசலும், நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக துவாரகா, மானேசர் இடையிலான பயண நேரம் 15 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல மானேசரிலிருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 20 நிமிடங்களிலும், துவாரகாவிலிருந்து சிங்கு எல்லைக்கு 25 நிமிடங்களிலும், மானேசரிலிருந்து சிங்கு எல்லைக்கு 45 நிமிடங்களிலும் பயணிக்க முடியும்.

இந்த விரைவுச் சாலையின் இருபுறமும் 3 வழி சர்வீஸ் சாலைகள் அமையும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சர்வீஸ் சாலைகளில் ஆங்காங்கே நுழைவு முனைகள் உருவாக்கப்படும்.

இந்த சாலை கட்டுமானத்துக்கு 2 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவரில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் போல 30 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x