Published : 22 Aug 2023 07:04 AM
Last Updated : 22 Aug 2023 07:04 AM

முந்தைய ஊழலை மக்கள் மறக்கவில்லை: ம.பி. நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய ஊழல் காலத்தை மக்கள் மறக்கவில்லை. அப்போதைய ஊழல் ஆட்சிக் காலத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச அரசு தொடக்கப் பள்ளிகளில் புதிதாக 5,500 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான பணி ஆணை வழங்கும் விழா தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

புதிதாக அரசு பணியில் சேர இருக்கும் 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் 50,000 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசை பாராட்டுகிறேன்.

மக்களின் வரிப்பணத்தில் ஒருபைசாகூட வீணாகாமல் வளர்ச்சிதிட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு, மத்திய பிரதேச அரசு மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. இப்போது நாம் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். ஊழல் இல்லாத நல்லாட்சியே இந்த சாதனைக்கு காரணமாகும்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய ஊழல் காலத்தை மக்கள் மறந்துவிடவில்லை. அப்போதைய ஊழல் ஆட்சிக் காலத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இப்போது மக்களுக்கு சேர வேண்டிய பணம் ஒரு பைசாகூட குறையாமல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டு உள்ளது. புதிய கல்வி கொள்கையில் பாரம்பரிய தொழில் அறிவுக்கும், தொழில்நுட்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. முந்தைய காலத்தில் தாய் மொழி கல்விக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆங்கில வழிக் கல்வி மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய கல்வி கொள்கையில் தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x