Published : 22 Aug 2023 08:12 AM
Last Updated : 22 Aug 2023 08:12 AM

தெலங்கானாவின் 115 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பிஆர்எஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கோப்புப்படம்

ஹைதராபாத்: நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்றது. இதில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் முதல்வரானார்.

இதனை தொடர்ந்து 9 மாதங்களுக்கு முன்னரே ஆட்சியை கலைத்துவிட்டு 2-ம் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி, 2-வது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார். தற்போது டிஆர்எஸ் கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்டு, பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பிஆர்எஸ் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

முதல்வர் சந்திரசேகர ராவ்,காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். காங்கிரஸ், பாஜக இல்லாத 3-வது அணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். எம்ஐஎம் கட்சியுடன் நட்புறவு கொண்டிருப்பதால், இவருக்கு தெலங்கானாவில் முஸ்லிம்களின் ஆதரவு இருக்கிறது.

தீவிர ஆன்மிகவாதியான சந்திரசேகர ராவ் நேற்று பஞ்சமி என்பதால் கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஹைதராபாத் தெலங்கானா பவனில் வெளியிட்டார். மொத்தமுள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார். இந்தமுறை சந்திரசேகர ராவ், காமாரெட்டி மற்றும் கஜ்வால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தற்போதைய அமைச்சர்கள், பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. 7 பேர் மட்டும் மாற்றப்பட் டுள்ளனர்.

33% மகளிர் இட ஒதுக்கீடு? மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா டெல்லியில் போராட்டம் நடத்தினார். ஆனால், பிஆர்எஸ் வேட்பாளர் பட்டியலில் 8 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 33 சதவீத மகளிர் ஒதுக்கீட்டை பின்பற்றவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓரம் கட்டப்பட்ட கம்யூனிஸ்ட்கள்: முனுகோடு இடைத்தேர்தலில் திடீரென கம்யூனிஸ்ட்களுடன் கைகோத்து, 'இனி கம்யூனிஸ்ட்கள் நமது தோழர்கள்’ என கூறி பிஆர்எஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்தார் சந்திரசேகர ராவ். அப்போதுமுதல் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட்களும், சிபிஎம் கட்சிக்கு 2 சீட்களும் ஒதுக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். மீதமுள்ள 4 இடங்களிலும் அவரது கட்சி வேட்பாளர்களே போட்டியிட உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தெலங்கானா முழுவதும் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 3-வது முறையும் சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்பார் என்று பிஆர்எஸ் கட்சியினர் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x