Published : 22 Aug 2023 09:30 AM
Last Updated : 22 Aug 2023 09:30 AM
ஒஹியோ: வெஸ்டர்ன் மற்றும் சதன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை சுமார் 4 மணி நேரம் போராடி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் நடைபெற்ற இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினார்கள். இதில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்றசெட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்பட்டம் வென்றார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்றது. 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஏடிபி தொடர்களின் இறுதிப் போட்டி (3 செட்கள் கொண்டது) நீண்ட நேரம் தற்போதுதான் நடைபெற்றுள்ளது.
ஜோகோவிச் தனது வாழ்நாளில் கைப்பற்றிய 95-வது பட்டமாக இது அமைந்தது.இதன் மூலம் ஏடிபி தொடர்களில் ஒற்றையர் பிரிவில் 94 பட்டங்களை வென்று 3-வதுஇடத்தில் இருந்த அமெரிக்காவின் இவான்லெண்டிலின் சாதனையை கடந்துள்ளார் ஜோகோவிச். இந்த வகை சாதனையில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (109), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (103) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். ஸ்பெயினின் ரபேல் நடால் 92 பட்டங்களுடன் 5-வது இடம் வகிக்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 7-வது இடம் வகித்த அமெரிக்காவின் கோ கோ காஃப் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கோ கோ காஃப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் கரோலினா முச்சோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT