Published : 21 Dec 2017 09:50 AM
Last Updated : 21 Dec 2017 09:50 AM
திருமலையில் கடும் குளிர் காற்று வீசி வருவதாலும், பனி மூட்டத்தாலும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகாலை சுப்ரபாத சேவைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நடுங்க வைக்கும் குளிர் காற்று, பனி மூட்டத்தால், திருப்பதியிலிருந்து திருமலைக்கு மலைப்பாதைகளில் வாகன ஓட்டிகளும் அதிக சிரமங்களுக்கிடையே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 2,799 அடி உயரத்தில் உள்ள திருமலையில் தற்போது ஈரப்பதம் குறைந்தபட்சம் 12 டிகிரியாகவும், அதிக பட்சம் 21 டிகிரியாகவும் பதிவாகி வருகிறது. வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை குளிர் மேலும் அதிகரிக்கலாமென கருதப்படுகிறது. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் குளிரை தாங்க கூடிய ஸ்வட்டர்கள், கம்பளிகள் போன்றவை எடுத்து செல்வது நல்லது.
திருமலையில் தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு, கிறுஸ்துமஸ் விடுமுறை, வைகுண்ட ஏகாதசி, துவாதசி, ஆங்கில புத்தாண்டு என விடுமுறைகள், முக்கிய பண்டிகை நாட்கள் வருவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஆதலால் திருமலையில் தங்குவதற்கு போதிய அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் வெளி இடங்களில் படுக்க நேரிடும். கடும் குளிரை தாங்க தேவஸ்தானம் தற்காலிக ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பக்தர்கள் கருதுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி வரும் 29-ம் தேதி வருவதால், அதற்கு முன்வரும் செவ்வாய்கிழமையான 26-ம் தேதி திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவைகள் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT