Published : 21 Aug 2023 05:00 PM
Last Updated : 21 Aug 2023 05:00 PM

அமைச்சரவை பரிந்துரைத்தும் மணிப்பூர் சட்டப்பேரவை கூடாதது ஏன்? - ஒரு பார்வை

கோப்புப்படம்

இம்பால்: அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் வராததால் திட்டமிட்டபடி இன்று (ஆக.21) மணிப்பூர் சட்டப்பேரவை கூடவில்லை. மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், 7 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 10 குகி எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடின்றி பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அறிவித்திருந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அரசு அதிகாரி ஒருவர், "சாதாரணமாக சட்டப்பேரவைக் கூட்டம் கூடுவதுக்கு 15 நாட்களுக்கு முன்பாக அதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், இந்த முறை இன்னும் அத்தகைய எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை" என்றார்.

இந்த மாதம் தொடக்கத்தில் அமைச்சரவைக் கூடியபோது சட்டப்பேரவையைக் கூட்ட கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆக.4-ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், "12-வது மணிப்பூர் சட்டப்பேரவையின் 4-வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரினை ஆக.21-ம் தேதி கூட்டுமாறு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, மாநிலத்தில் இனக்கலவரம் தொடங்குவதற்கு முன்பாக மார்ச் மாதத்தில் முந்தைய சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. "கடைசியாக மார்ச் மாதம் நடந்த பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த பேரவைக் கூட்டம் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் கூட்டப்பட வேண்டியது அரசியலமைப்பு கடமைகளுள் ஒன்று” என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரான ஓ இபிபோ சிங் கூறுகையில், "மணிப்பூர் அமைச்சரவை பரிந்துரைத்தப் பின்னரும் இன்னும் சட்டப்பேரவைக் கூட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒருமுறை மாநில சட்டப்பேரவை கூட்டப்படுவது கட்டாயமாகும்" என்று தெரிவித்தார். ஒருவேளை பேரவைக் கூடினாலும் அதில் குகி சமூகத்தினைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்பார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நான் பங்கேற்க இயலாது என்று சுராசந்த்பூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ எல்.எம்.கவுட் தெரிவித்திருந்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைப்பேசி வழியாக பேட்டி அளித்திருந்த அவர், வன்முறை மற்றும் குகிகளுக்கு தனிநிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது தீர்வு எட்டப்படாததால் மற்ற குகி ஸோ எம்எல்ஏக்களும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுராசந்த்பூர் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாகா அமைதிப் பேச்சுவார்த்தை அரசால் தடுப்பட்டதாக நாகா எம்எல்ஏக்கள் கருதுவதால், அவர்களும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், "செப்.2-ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படும்" என்றார்.

மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி இனத்தையும், 40 சதவீதம் பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குகி பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து கோரியதில் அவர்களுக்கும் நாகா உள்ளிட்ட பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வன்முறை சம்பவங்களில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே மே 4-ம் தேதி தொடங்கிய வன்முறையின்போது குகி ஸோ பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x