Published : 21 Aug 2023 09:51 AM
Last Updated : 21 Aug 2023 09:51 AM
சிம்லா: இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் இன்று (ஆக.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (ஆக.22) முதல் வரும் 24 ஆம் தேதி வரை இவ்விரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் என்றால் 24 மணி நேரத்துக்கு 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை / பனிப்பொழிவு பெய்யும் என்பதைக் குறிப்பதாகும். இந்த மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்கின்றனர். ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டால் மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய இரு இமயமலை மாநிலங்களிலும் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக மிகப் பெரிய அளவில் பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் இதுவரை மழை, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அண்மை அறிவிப்பின்படி இமாச்சலில் பருவமழையின் தீவிரம் சற்றே குறைந்துள்ளது. இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சம்பா, மாண்டி மாவட்டங்களில் ஆகஸ்ட் 26 வரை மழை, வெள்ளத்துக்கு வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நிலச்சரிவு, திடீர் வெள்ளப் பெருக்கு, பயிர்ச் சேதம், பழச்செடிகள் சேதம், விதைகப்பட்ட பயிர்கள் அழுகிப்போதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் எச்சரிக்கை: உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூன், பாரி, நைனிடால், சம்பாவாட், பாகேஸ்வர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT