Published : 20 Aug 2023 07:04 AM
Last Updated : 20 Aug 2023 07:04 AM
புதுடெல்லி: கோவாவைச் சேர்ந்த சுரங்க அதிபர் ராதா டிம்ப்லோ. கோவாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படுபவர். இவரது மகன் ரோஹன் டிம்ப்லோ. இவரும் பல்வேறு தொழில்களை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், 2021-ம் ஆண்டுவெளியான ‘பண்டோரா பேப்பரஸ்’ ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கின் கீழ் ரோஹன் டிம்ப்லோவின் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
வரி விதிப்பிலிருந்து தப்பிக்க பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் வெளிநாடுகளில் வைத்திருக்கும் போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சொத்துகள் தொடர்பான ஆவணங்களை ‘பண்டோராபேப்பர்ஸ்’ என்ற தலைப்பில்,புலனாய்வுப் கூட்டமைப்பு 2021-ம் ஆண்டு வெளியிட்டது. 200 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர் இந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தன.
விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழில் அதிபர் அனில் அம்பானி உட்பட 300 இந்தியர்களின் பெயர் இந்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்தது.
ரோஹன் டிம்ப்லோவுக்கு சிங்கப்பூரில் அறக்கட்டளை இருப்பதாகவும், அந்த அறக்கட்டளையின் கீழ் மூன்று நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறைவிசாரணையில் இறங்கியது. இந்தவெளிநாட்டு அறக்கட்டளை மூலம்,ரோஹன் டிம்ப்லோ அந்நியபரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT