Published : 20 Aug 2023 01:11 AM
Last Updated : 20 Aug 2023 01:11 AM
லே: இந்திய ராணுவத்தின் வாகனம் லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியபோது, நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வாகனத்தில் எட்டு ஜவான்கள், ஒரு ஆணையர் மொத்த பத்து ராணுவ வீரர்கள் பயணம் செய்த நிலையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "லடாக் சாலை விபத்தில் நமது வீரம்மிக்க வீரர்களை இழந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நிற்கும். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT