Published : 19 Aug 2023 04:38 PM
Last Updated : 19 Aug 2023 04:38 PM
லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்குச் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் பயணித்தார்.
பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ராகுல் காந்தி. பல்வேறு வகையான பைக்குகளை அவர் வைத்துள்ளார். இதனை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்த ராகுல் காந்தி, ஆனால் தனது பாதுகாவலர்கள் பாதுகாப்பு கருதி தன்னை பைக் ஓட்ட அனுமதிப்பதில்லை என கூறி இருந்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக லடாக்கிற்கு நேற்று வருகை தந்தார். தலைநகர் லே-வில் இளைஞர்களிடம் நேற்று கலந்துரையாடிய ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக லடாக்கின் பாங்காங் ஏரிக்கு இன்று பைக்கில் பயணித்தார். அவர் பைக் ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி என்று தனது தந்தை அடிக்கடி கூறுவார் என தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அவர் லடாக் வந்திருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் வரும் 25ம் தேதி வரை லடாக்கில் இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள ராகுல் காந்தி, லே-வில் நடக்க இருக்கும் கால்பந்தாட்டத்தைப் பார்வையிட உள்ளார். தனது கல்லூரிக் காலத்தில் கால்பந்தாட்ட வீரராக ராகுல் காந்தி இருந்துள்ளார். லடாக்கின் மலைவாழ் மக்கள் கவுன்சில் தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக நடைபெற உள்ள கூட்டத்தில் வரும் 25ம் தேதி ராகுல் காந்தி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT