Published : 19 Aug 2023 04:05 PM
Last Updated : 19 Aug 2023 04:05 PM
மும்பை: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார் சிவசேனா பால் தாக்கரே கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி. மேலும், வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், இந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி வாரணாசியில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் போட்டியிடக் கூடும் என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற அஜய் ராய் நேற்று பேட்டியளித்த நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் பிரியங்காவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். சதுர்வேதி மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் தொடங்கி செங்கோட்டை வரை எதிர்க்கட்சி கூட்டணி பற்றியே பேசுகிறார். அவருக்கும், அமித் ஷாவுக்கும் பயம் வந்துவிட்டது" என்றார்.
ஏற்கெனவே ராகுல் காந்தி அமேதியில் இருந்து போட்டியிடுவார் என்று அஜய் ராய் கூறியிருந்தார். ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டால் அவர் பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியை எதிர்கொள்வார். கடந்த 2019 தேர்தலில் ஸ்மிருதி இரானி ராகுலை 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் முறையே அமேதி மற்றும் வாரணாசி தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பல தரப்பில் இருந்தும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் எம்.பி.யாக உள்ளார். இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி குஜராத்தில் ஒரு தொகுதியிலும், தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் போட்டியிடக்கூடும் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT