Published : 19 Aug 2023 02:38 PM
Last Updated : 19 Aug 2023 02:38 PM

துவாரகா விரைவுச் சாலை செலவு விவகாரம்: சிஏஜி அறிக்கையும், நிதின் கட்கரி விளக்கமும்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப் படம்

புதுடெல்லி: துவாரகா விரைவுச் சாலை செலவு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், "துவாராகா விரைவுச் சாலை என்பது சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல் 29 கிலோ மீட்டர் அல்ல, அது மொத்தம் 230 கிலோ மீட்டர். அதன்படி ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.9.5 கோடி செலவழிக்கப்பட்டது. சிஏஜி அதிகாரிகளிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்களும் அந்த விளக்கத்தால் சமாதானம் அடைந்தனர். இருந்தும் அவர்கள் அறிக்கையில் 29 கிலோ மீட்டர் என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்" என்றார்.

சிஏஜி அறிக்கையும், சர்ச்சையும்: துவாரகா விரைவுச் சாலை ஹரியாணாவிலும் செல்கிறது. இங்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.251 கோடி செலவிடப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.2 கோடி என்ற சராசரி தொகையைவிட இது பல மடங்கு அதிகமாக செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

துவாரகா விரைவுச் சாலை செலவு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்தத் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. இதையடுத்து, இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் வியாழக்கிழமை உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், துவாரகா விரைவுச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாறாக, சிஏஜி-க்கு போதுமான தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வழங்காததே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கட்கரி மிகுந்த வருத்தமடைந்ததாகவும், இதற்குக் காரணமானவர்கள் யாரோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சர் கட்கரி இன்று ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், துவாரகா விரைவுச் சாலை சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார்.

இண்டியா கூட்டணி உருவாக பாஜகவே காரணம்: தொடர்ந்து நிதின் கட்கரியிடம் இண்டியா எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கட்கரி, "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கட்டமைத்ததே பாஜகதான். கொள்கை ரீதியாக ஒருபோதும் இணைந்துபோகாதவர்கள், ஒருவொருக்கொருவர் முகத்தை நேரில் பார்த்திராதவர்கள் எல்லோரும் ஒன்று கூடி டீ குடித்தனர். இப்போது அவர்கள் எல்லோரும் இணைந்து எங்களை எதிர்க்க வருகிறார்கள்" என்றார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.. - அடுத்தக்கட்ட திட்டங்கள் பற்றி பேசிய அமைச்சர் கட்கரி, "காஷ்மீர் - கன்னியாகுமரி விரைவுச் சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். டெல்லி - மும்பை விரைவுச் சாலை வரும் பிப்ரவரிக்குள் நிறைவு பெறும். சூரத் முதல் நாசிக் வரையிலும், நாசிக்கில் இருந்து அகமதுநகர் வரையிலும் பசுமை வழிச்சாலை உருவாக்கி வருகிறோம். இது சோலாப்பூர் வரை செல்லும். மியான்மர், வங்கதேசம், பூட்டானுக்கும் நேபாளத்துக்கும் சாலை அமைத்து வருகிறோம்.

இனி வருங்காலங்களில் இ-வாகனங்கள் விலை குறையும். உங்களால் பெட்ரோலுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் செலவழிக்க முடிந்தால், இ-வாகனத்துக்காக ரூ.2000 செலவழிக்க இயலாதா?" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x