Published : 19 Aug 2023 06:07 AM
Last Updated : 19 Aug 2023 06:07 AM
பெங்களூரு: பெங்களூரு அல்சூரில் உள்ள கேம்பிரிட்ஜ் லே-அவுட்டில் 3டி பிரின்டிங் எனப்படும் முப்பரிமாண முறையிலான அஞ்சலகம் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின.
சென்னை ஐஐடி நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின்படி எல் & டி கட்டுமான நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொண்டது. 1,100 சதுர அடி பரப்பளவில் இந்த அஞ்சலகம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் வெறும் 45 நாட்களில் நிறைவடைந்ததை தொடர்ந்து மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘நாட்டிலேயே 3டி பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட முதல் அஞ்சலகம் இதுதான். 3டி தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நாடுபுதிய பரிமாணத்தை கண்டடைந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. நாமே 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவோம் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த அஞ்சலகத்தின் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று பகிர்ந்து, ‘‘பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 3டி பிரின்ட் அஞ்சலகத்தை பார்க்கும் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வார்கள். இது நாட்டின் புதுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உதாரணமாக விளங்குகிறது. நாட்டின் தற்சார்பின் அடையாளமாக திகழ்கிறது. இதன்கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்’’ என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT