Published : 14 Dec 2017 11:16 AM
Last Updated : 14 Dec 2017 11:16 AM

4 பெண் பிள்ளைகளை பெற்ற தாய்க்கு கைகொடுத்த கடல் தாய்: மீன்பிடித் தொழில் செய்யும் கேரளாவின் தைரியலெட்சுமி

கேரள மாநிலத்தில் கடலில் சென்று மீன்பிடித் தொழில் செய்யும் பெண் ரேகா அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள சேட்வா பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ரேகா (45). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இத்தம்பதியினரின் மூத்த மகள் மாயா பனிரெண்டாம் வகுப்பும், இரண்டாவது மகள் அஞ்சலி 9-ம் வகுப்பும், மூன்றாவது மகள் தேவிப்பிரியா 5-ம் வகுப்பும், கடைக்குட்டி லெட்சுமிப் பிரியா 3-ம் வகுப்பும் படிக்கின்றனர். நான்கு பெண் பிள்ளைகள், காதல் திருமணத்தினால் உறவுகளின் ஆதரவு இன்மை என இக்கட்டான நிலையில்தான் நகர்ந்தது இவர்களது வாழ்வு. கடல் தொழிலில் கோலோச்சும் பெரும் படகுகளுக்கு மத்தியில், பழமையான தனது வள்ளத்தில் போய் மீன்பிடித் தொழில் செய்து வந்தார் கார்த்திகேயன்.

கஷ்ட ஜீவனத்தில் குடும்பம் நிற்க, அந்த நேரத்தில் கார்த்திகேயனோடு உடன் செல்லும் உதவியாளர்களும் நின்றுவிட்டார்கள். அப்போது ‘‘நான் கடலுக்கு வரலாமா என்று கேட்டார் மனைவி ரேகா. மனைவியின் ஆர்வத்தை கண்டு கார்த்திகேயனும் சம்மதித்தார். ஆனால், ‘ஆர்ப்பரிக்கும் கடல் அலையில், எதிர்நீச்சல் இடும் வள்ளத்தில், தொழிலுக்கு சென்று மீனவர்கள் திரும்பி வருவதே ஜீவமரண போராட்டம் என்னும் நிலையில், பெண்ணுக்கு இது சாத்தியமா? அது சாத்தியம் இல்லாததனால்தான் ஆண்கள் மீன்பிடித் தொழிலுக்கு கடலுக்கும், பெண்கள் அதை கரையில் விற்கவும் செய்கின்றனர்’ என்ற ஊர்க்கார்களின் வார்த்தைகளில் ரேகா சமாதானம் அடையவில்லை. குடும்ப சூழலை சுட்டிக் காட்டி களத்தில் இறங்கினார்.

இது குறித்து ரேகா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

குடும்ப சூழ்நிலையால்தான் கடலுக்கு மீன் பிடிக்க கணவரோடு இறங்கினேன். பெரிய வசதியெல்லாம் இல்ல. கடல் மாதா புண்ணியத்துல நித்தம் ஜீவனம் நடக்குது. பத்து வருசத்துக்கு முன்னாடி சுசூகி இஞ்சின், வள்ளத்தோட சேர்த்து 1.25 லட்சத்துக்கு வாங்குனோம். அதுவும் பழசைத்தான். அதுக்கு முன்னாடியே இந்த வள்ளம் 15 வருசமா ஓடி இருக்கு. புதுசு வாங்க வழியில்லை. ஆனாலும் வாழ்க்கையில் ஜெயிப்போம்ன்னு நம்பிக்கையோட ஓடிக்கிட்டு இருக்கோம்.

என் கணவர்தான் எனக்கு மீன்பிடித் தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுத் தந்தார். இத்தனைக்கும் எங்கள் படகில் காம்பஸ், ஜிபிஎஸ் என எந்த நவீன வசதியும் கிடையாது. கடல் தாய்தான் ஆபத்தில் இருந்து காக்கிறாள். முதலில் கடலுக்கு போகும்போது, நீரோட்டத்தில் வள்ளம் ஆடுவதில் எனக்கு வாந்தி, மயக்கமெல்லாம் வந்தது. வள்ளத்திலேயே படுத்து சரிந்து இருக்கிறேன். ஆனால் வீட்டில் இருக்கும் 4 பெண் பிள்ளைகளை நினைத்து எழுந்து அமர்வேன். இப்போ முழுமையான கடல் தொழிலாளியாகி 10 வருசம் ஆச்சு. மத்திய கடல் சார் ஆராய்ச்சி மையம் எங்களுக்கு உதவி செய்தது. கடலுக்குள் கூண்டு மீன் வளர்ப்பு முறையில் அவுங்க ஆதரவோட ‘களஞ்சி’ ரக மீனை வளர்க்குறோம். காலையில் கடலுக்கு தொழிலுக்கு போகும்போது கூண்டை ஒரு எட்டு பார்த்துட்டு உணவு போட்டுட்டு போவோம்.

இப்போ எனக்கு மீன் வலை போடுறதுல இருந்து, இஞ்சினை இயக்கி படகை செலுத்துற வரைக்கும் அத்துபடி”என்கிறார்.

அண்மையில் மத்திய கடல்சார் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ரேகாவுக்கு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் சுதர்சன் பகத், இந்தியாவின் முதல் மீனவ பெண் என உரிமத்தை ரேகாவுக்கு வழங்கி பாராட்டினார். இதேபோல் இந்த ஆராய்ச்சி மையம் ரேகாவின் மூத்த மகள் மாயாவின் கல்விக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது. தற்போது வீசிய ஒக்கி புயலில் இத்தம்பதி கூண்டு கட்டி வளர்த்த பல மீன்கள் கூண்டை விட்டு போய்விட்டன. இதனிடையே, கேரள ஊடகங்களின் மூலம் ரேகாவின் சாதனைகள் குறித்து கேள்விப்பட்ட ‘கார்மினி’ என்னும் அமெரிக்க நிறுவனம் அவருக்கு உதவ முன்வந்துள்ளது. ரேகா இந்தி மொழியில் டிப்ளமோ படித்தவர் என்பது கூடுதல் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x