Published : 22 Dec 2017 02:24 PM
Last Updated : 22 Dec 2017 02:24 PM
'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக' வங்கிகளின் வாராக்கடனை வசூலிக்க முடியாத மத்திய அரசு, வங்கிகளில் சாதாரண மக்கள் டெபாசிட் செய்துள்ள தொகை மீது கை வைக்கிறது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே ரங்கராஜன் விமர்சித்துள்ளார்.
எப்ஆர்டிஐ எனப்படும் நிதி தீர்வு மற்றும் இன்சூரன்ஸ் முதலீட்டு மசோதா பற்றி தற்போது பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியைத் தொடர்ந்து எப்ஆர்டிஐ மசோதா வங்கி முதலீட்டாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் திவாலாகும் பட்சத்தில், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தெளிவான விதிமுறைகள் இல்லை. இந்த மசோதா மூலம் அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் `பெயில் இன்’ என்னும் விதி இருக்கிறது. அதாவது வங்கி நிதி நெருக்கடியில் இருக்கும் பட்சத்தில் வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்தை மூலதனமாக வைத்து வங்கியை தொடர்ந்து இயக்கலாம் என்னும் விதி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய விதிமுறைகளின் படி, வங்கியில் ஒருவர் எத்தனை லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், வங்கியில் நிதி நெருக்கடி என்னும் பட்சத்தில் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகை மட்டும் கிடைக்கும். புதிய ‘பெயில் இன்’ விதிமுறைப்படியும் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் அதற்கு மேல் உள்ள தொகையை டெபாசிட் செய்தவரின் அனுமதி இல்லாமல் வங்கிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் இந்த மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான டி.கே ரங்கராஜன் தமிழ் இந்துவிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
எப்ஆர்டிஐ மசோதா பற்றி பொதுவான உங்கள் கருத்து?
இந்தியாவில் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் பெரும் முதலாளிகள் அல்ல. சாதாரண, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் டெபாசிட் செய்கின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்கள், சிறு வணிகர்கள், தனியார் நிறுவனங்களின் பணியாற்றும் நடுத்தர குடும்பத்தினர்கள் தங்கள் எதிர்கால தேவைக்காக வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர். மகன் அல்லது மகளின் திருமணச் செலவு, மருத்துவுச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றை கருத்தில் கொண்ட வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்கின்றனர்.
அவர்களது பணத்தை, வங்கியின் நிதி நெருக்கடிக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது. இது, மிகமோசமான செயல். அவர்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு பதில் வங்கியின் பங்கு அல்லது பாண்டுகளாக தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? டெபாசிட் செய்த பணம் முதிர்ச்சியடைந்து தேவைப்படும் நேரத்தில் அவர்களால் பயன்படுத்த முடியாமல் போனால் அதைவிட மிக மோசமான நிலை எதுவும் இருக்க முடியாது. சாதாரண மக்களைப் பாதிக்கும் இந்த செயலை ஏற்க முடியாது. நடுத்தர குடும்பங்களை குறி வைத்து அவர்களது பணத்தை பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனினும், இந்த மசோதாவை நினைத்து கவலைப்படத் தேவையில்லை,‘பெயில் இன்’ ஏன் தேவை என்பது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே டெபாசிட் தொகை மீது கை வைக்க மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறதே?
ஒரு மசோதாவில் இதுபோன்ற பிரிவை ஏற்படுத்திவிட்டு, அதனால் பெரிய ஆபத்து இருக்காது என்ற வாதம் நகைப்புக்குரியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், சட்டப்படி டெபாசிட்களின் மீது கை வைக்க முடியும். தற்போதைய நிலையில் டெபாசிட்கள் `பெயில் இன்’ விதிமுறைக்குள் வராது என்பதே உண்மை. வங்கிகளுக்கு இத்தகைய அதிகாரம் வழங்கப்ப்டடால், அதில் முதலீடு செய்யும் மக்கள் பாதிக்கப்படுவர். இதுமட்டுமின்றி வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கிக்கு உள்ள கட்டுப்பாடுகளையும் கூட இந்த மசேதா பறித்து விடும் ஆபத்து உள்ளது. வங்கிகளின் நிதிநிலைத்தன்மை குறித்த ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது, குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை போன்று, சாதாரண மக்களின் வங்கி டெபாசிட் மீது கை வைப்பதை விட்டுவிட்டு, வாராக்கடனை வசூலிக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
வங்கிகளின் வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சொல்கிறதே?
வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருவதால், வங்கிகள் திவால் ஆகும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. பெரு நிறுவனங்கள் வாங்கிய வங்கிக் கடன் தொகை பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாராக்கடனாக உள்ளது. ஒருவர் செய்யும் தொழில், அதில் அவர் லாபம் சம்பாதிக்கவுள்ள வாய்ப்பு, தொழில் தொடர்ந்து நடைபெற உள்ள சூழல் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் பல கோடி ரூபாய் வங்கி பணத்தை வாரிக்கொடுத்ததன் விளைவு வாராக்கடனாக உருவெடுத்துள்ளது.
இதுபோன்ற வாராக்கடனின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தவும், கொடுத்த கடனை வசூலிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக சாதாரண மக்களின் டெபாசிட் மீது குறி வைக்கப்படுகிறது.
திவால் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கை மூலம் வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதே?
திவால் சட்டத்தின் மூலம் வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது ஏமாற்று வேலை. வாராக்கடன் பட்டியலில் உள்ளவர்கள், சொத்து ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது என்பதை தவிர அந்த சட்டத்தால் பெரிய பலன் ஏதும் இல்லை. அதேசமயம் வாராக்கடனை வசூலிக்க அரசு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜய் மல்லையா போன்றவர்கள் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்துக்கு செல்கின்றனர். அதை தடுக்கவோ, அவரிடம் இருந்து கடனை வசூலிக்கவோ நடவடிக்கை இல்லை.
இவ்வாறு டி.கே. ரங்கராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT