Published : 18 Aug 2023 04:02 PM
Last Updated : 18 Aug 2023 04:02 PM
பெங்களூரு: 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழில்நுட்பத்தின் புதிய புரட்சியாக 3டி பிரிண்டிங் முறை அறிமுகமாகி வருகிறது. இந்தியாவின் முதல் 3டி பிரின்டிங் வீடு, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் திறந்து வைக்கப்பட்டது. ராணுவ கட்டுமானங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சியின் அடிப்படையில் கவுஹாத்தி ஐஐடி மூலம் ராணுவ நிலை அலுவலகங்கள் கடந்த ஆண்டு கட்டப்பட்டன. தெலங்கானாவின் சித்திபெட் பகுதியில் 3,800 சதுர அடி பரப்பளவில் கோவில் ஒன்று 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 3டி பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட முதல் தபால் நிலையம் பெங்களூருவில் இன்று திறக்கப்பட்டது. பெங்களூருவின் உல்சூர் பசார் அருகே உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் கட்டப்பட்டுள்ள இந்த தபால் நிலையத்தை மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். 1100 சதுர அடி பரப்பளவில் இந்த தபால் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இது பெருமை மிகு தருணம். 3டி தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த 3டி தொழில்நுட்பத்தின் மூலம் நாம் இந்தியாவின் புதிய பரிமாணத்தைப் பார்க்கிறோம்" என குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 3டி பிரின்ட்டெட் தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். இது இந்தியாவின் புதுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. தற்சார்பு இந்தியாவின் அடையாளம். இந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்" என தெரிவித்துள்ளார்.
3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பம் என்றால் என்ன? - கனிணி மூலம் வரையப்பட்ட ஒரு ஓவியத்தை பிரின்ட் எடுப்பதன் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக இதை குறிப்பிடலாம். ஒரு கட்டுமானத்தை எவ்வாறு கட்ட வேண்டும் என்பதை கனிணி மூலம் வரைந்து, 3டி முறையில் ரோபோ அமைப்புகளைக் கொண்டு இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. வழக்கமான கட்டுமானத்தைப் போல் அல்லாமல், இது முழுக்க முழுக்க கனிணியில் வடிவமைக்கப்பட்டதை நிஜத்திற்குக் கொண்டு வரும் கட்டுமானத் தொழில்நுட்பம். இந்த கட்டுமானத்தில், சிமெண்ட், பிளாஸ்டிக், திரவ உலோகங்கள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய கட்டுமானத்துக்கு செலவு குறைவு என்றும், வழக்கமான கட்டுமானச் செலவில் 4-ல் ஒரு பங்கு மட்டுமே செலவாகும் என்றும், அதேபோல், வழக்கமான கட்டுமானத்துக்கான கால அளவைவிட மிக குறைந்த கால அளவில் இந்தக் கட்டுமானங்களை கட்டி முடிக்க முடியும் என்றும் 3டி பிரின்டிங் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கனிணியின் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானப் பணிகள் ரோபோ மூலம் நடப்பதால் பணிகள் துல்லியமாக இருப்பதாகவும், விதவிதமான வடிவங்களில் இத்தகைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தவது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த கட்டுமானம் குறித்த வீடியோ
The spirit of Aatmanirbhar Bharat!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment