Published : 13 Dec 2017 10:17 AM
Last Updated : 13 Dec 2017 10:17 AM
வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டையொட்டி, இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை 24 மணி நேரமும் திருப்பதி மலைப்பாதை பக்தர்களுக்காக திறந்தே இருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 29-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் விரைவாக செய்து வருகிறது. சொர்க்க வாசல் திறக்கப்படுவதையொட்டி, வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸுக்கு வெளியே நாராயணகிரி பகுதியில் பக்தர்களுக்காக 6 கி.மீ தூரத்திற்கு தற்காலிக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி 29-ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய தினம் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 29-ம் தேதி காலை 5.30 மணிக்கு விஐபி பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. காலை 8 மணி முதல், சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.
வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் இதனைத் தொடர்ந்து ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று 28-ம் தேதி முதல், ஜனவரி 1-ம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் 24 மணி நேரமும் திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதை திறந்தே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிபாரிசு கடிதங்களும் வரும் ஜனவரி 1-ம் தேதி வரை ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT