Published : 26 Dec 2017 03:31 PM
Last Updated : 26 Dec 2017 03:31 PM
தங்கள் சமுதாய மக்கள் அனைவரும் இந்திய கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஷியா பிரிவில் ஒன்றான தாவூதி போரா தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மேற்கத்திய பாணி கழிப்பறைகளை சிலர் உடைப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தாவூதி போரா தலைவர் சையத்னா முஃபதால் சையபுதீன், இந்திய பாணி கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து ஜமாத்தின் உறுப்பினர்கள் சிலர் மும்பையில் வீடு வீடாகச் சென்று கழிப்பறைகளைச் சோதனையிட ஆரம்பித்தனர். மேற்கத்திய பாணி கழிப்பறைகள் இருந்த வீடுகள் சிலவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டன. சில வீடுகளில் அவை அடித்து உடைக்கப்பட்டன.
''சையபுதீன் உடல் ஆரோக்கியத்துக்காக இந்திய பாணி கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டும் என்று கோரியது சரியே. ஆனால் வயதானவர்களின் நிலையையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். கடந்த வாரம் என்னுடைய வீட்டுக்கு வந்து சோதனையிட்ட சிலருக்கு இந்திய பாணிக் கழிப்பறையைக் காட்டி அனுப்பிவிட்டேன். ஆனால் இரு மாதிரியான கழிப்பறைகளும் எங்களின் வீட்டில் இருக்கின்றன'' என்கிறார் பேந்தி பஜார் பகுதியைச் சேர்ந்த ஒருவர்.
இதுகுறித்துக் கருத்து கூறும் மஸ்ஜித் உறுப்பினர் ஒருவர், ''சையபுதீனின் ஆலோசனை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இந்த முயற்சி 10 - 15 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் அனைவரும் தற்போது புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களில் மேற்கத்திய பாணி கழிப்பறைகளைக் கட்டிவிட்டனர். அதைப் பயன்படுத்தியும் பழகிவிட்டனர். இந்நிலையில் திடீரென அதை மாற்றச் சொல்வது கடினமாக இருக்கும்'' என்கிறார்.
இதுகுறித்து விளக்கிய போரா அமைப்பின் செய்தித் தொடர்பாளர், ''மேற்கத்திய பாணி கழிப்பறைகள் நம்முடைய கலாச்சாரத்துக்கு எதிரானவை. இந்திய கழிப்பறைகள் மருத்துவ பயன்களையும் சிறப்புகளையும் கொண்டவை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது'' என்றார்.
ஆனால் சீர்திருத்தவாதிகள் சிலர் கூறும்போது, ''இந்தியக் கழிப்பறைகளின் பயன்களைப் பரப்புவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை வலுக்கட்டாயமாகத் திணிப்பது தவறு'' என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT