Published : 17 Aug 2023 04:28 AM
Last Updated : 17 Aug 2023 04:28 AM
பெங்களூரு: தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா காவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது.
மேலும் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
இதை கர்நாடக அரசு அமல்படுத்தாததால், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீர் திறந்துவிட உத்தரவிட்டார். இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் உள்ள 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் 111.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4,753ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10,956 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,288 கனஅடி நீர் வரும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 6,025 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த 2 அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மொத்தமாக விநாடிக்கு 16,981 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
‘கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீரை திறக்கக்கூடாது’ என்று கர்நாடக விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT