Published : 17 Aug 2023 05:21 AM
Last Updated : 17 Aug 2023 05:21 AM

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா - சீனா பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சினையை விரைந்து தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா- சீனா ராணுவத்தினர் இடையே 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி மோதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட போருக்குப் பின் இந்த மோதல் நடந்ததால், இந்தியா - சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து எல்லை பிரச்சினைகளை பேசி தீர்க்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையால் கல்வான், பாங்காங் சோ வடக்கு மற்றும் தென்கரை பகுதிகள், ரோந்து பாய்ன்ட் 15 மற்றும் 17ஏ, கோக்ரா- ஹாட் ஸ்பிரிங் ஏரியா ஆகிய 5 இடங்களில் இருந்து இரு நாட்டு படையினரும் பின்வாங்கினர்.

தேஸ்பாங்க் சமவெளிப்பகுதிகள், டெம்சாக் ஆகிய பகுதிகளில் இருந்து இருந்து இரு நாட்டு வீரர்களும் வெளியேற சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. கடைசியாக 19-வது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்தது. இதில் இந்திய தரப்பில் லே பகுதியில் உள்ள 14-வது படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி ராணுவ கமாண்டர்கள் கருத்துக்களை வெளிப்படையான முறையில் பரிமாறிக் கொண்டனர்.

இதில் இரு நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்சினையை விரைவாக தீர்க்கவும், ராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இடைப்பட்ட காலத்தில் எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அமைதி காக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் சார்பில் டெல்லியிலும், பெய்ஜிங்கிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மேற்கு பகுதி எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான மற்றும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் 9, 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் 22 முதல் 24-ம் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் இரு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அப்போது பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x