Published : 17 Aug 2023 05:29 AM
Last Updated : 17 Aug 2023 05:29 AM
புதுடெல்லி: ‘‘முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால், இந்தியா சிறந்த பலன்களை அடைந்துள்ளது’’ என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
பாஜக.வின் மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய். கடந்த 1996-ம் ஆண்டு 13 நாட்கள், 1998 முதல் 1999 வரை 13 மாதங்கள் பாஜக சார்பில் பிரதமராக இருந்தார். அதன்பின், 1999 முதல் 2004 வரை 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தார். காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் முதல் முறையாக 5 ஆண்டு பிரதமர் பதவியை வகித்த சாதனையைப் படைத்தவர் வாஜ்பாய். அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். அப்போது அவரது வயது 93.
இந்நிலையில், வாஜ்பாய் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் (சதய்வ் அடல்) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, அடல் பிஹாரி வாஜ்பாயின் தொலைநோக்கு திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் இந்த நாடு சிறந்து பலன்களை அடைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிகச் சிறப்பானது. அனைத்து துறைகள் மேம்படுவதற்கும், 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா அடைவதற்கும் வாஜ்பாயின் பணி மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது. சிறந்த தலைவரின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் 140 கோடி மக்களுடன் நானும் இணைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT