Published : 17 Aug 2023 05:44 AM
Last Updated : 17 Aug 2023 05:44 AM

டெல்லியில் 7 மக்களவை தொகுதியிலும் போட்டி - காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் போட்டியிடுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் பாஜகவுக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்காக, 26 கட்சிகளின் தலைவர்கள் பாட்னா மற்றும் பெங்களூருவில் 2 முறை கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டணிக்கு 'இண்டியா' என பெயர் சூட்டி உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகுகாங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு மூத்த தலைவர் அல்கா லம்பாகூறும்போது, “இந்தக் கூட்டத்தில் 40 நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்றஇக்கூட்டத்தில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்” என்றார்.

பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது இண்டியா கூட்டணியின் முக்கிய வியூகமாக உள்ளது. குறிப்பாக, எந்த ஒரு தொகுதியிலும் வலுவாக உள்ள கட்சி வேட்பாளரை நிறுத்த பிற கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி வலுவாக, ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் அமைச்சருமான சவுரப் ரத்வாஜ் கூறும்போது, “இந்த விவகாரத்தில் கட்சியின் மத்திய தலைமை முடிவு எடுக்கும். எங்கள் தேர்தல் விவகாரக் குழுவும் இண்டியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x