Published : 16 Aug 2023 04:22 PM
Last Updated : 16 Aug 2023 04:22 PM
மும்பை: தனக்கோ அல்லது தன்னுடைய தந்தைக்கோ மத்திய அமைச்சர் பதவி தருவதாக பாஜக கூறவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த சென்ற அஜித் பவார், பாஜக கூட்டணியில் இருந்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரோடு, அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், அஜித் பவாரும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கட்சி இரண்டாக உடையக் கூடாது என அஜித் பவார் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சரத் பவார் - அஜித் பவார் இடையே நடக்கும் தொடர்ச்சியான சந்திப்பு குறித்து கூட்டணி கட்சியான சிவ சேனா(உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) கேள்வி எழுப்பியது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் 3-வது கூட்டம் வரும் 31-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள நிலையில், சரத் பவார் எந்த கூட்டணியில் இருக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த சரத் பவார், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் -சிவ சேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாகவும், இண்டியா கூட்டணியின் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான பொறுப்பை 3 கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகா விகாஸ் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ் கட்சியும், சரத் பவாரின் நிலை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகிய இருவரில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வந்துள்ளதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவுகான் கூறியது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த சுப்ரியா சுலே, “எனக்கோ, என்னுடைய தந்தைக்கோ மத்திய அமைச்சர் பதவி தருவதாக யாரும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவும் இல்லை. ஆனால், அவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) ஏன் இவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பது புரியவில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கவுரவ் கோகாய் ஆகிய தேசிய தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் நான் தொடர்பில் இருக்கிறேன். ஆனால், மகாராஷ்டிராவில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களோடு நான் தொடர்பில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்திய தலைவரான சரத் பவாரை, கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சந்தேகித்து வருவது மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மற்றும் சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகளுடன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தொடருமா என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT