Published : 16 Aug 2023 09:12 AM
Last Updated : 16 Aug 2023 09:12 AM
புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயால் இந்த தேசம் பெருமளவில் பயன்பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி, "இந்தியாவின் வளர்ச்சிக்காக வாஜ்பாயி முக்கியப் பங்காற்றியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டை இந்தியா பல்துறை வெற்றிகளுடன் எதிர்கொள்ளச் செய்தார்.
இன்று நான் அவருக்காக அஞ்சலி செலுத்தும் 140 கோடி பேரில் ஒருவராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பாஜகவின் முதல் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாயி, 6 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக அறியப்பட்டவர். பாஜகவை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. வாஜ்பாயி தனது 93 வது வயதில் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்: * மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் (1924) பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
* விக்டோரியா கல்லூரியில் சமஸ்கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கான்பூர் டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பில் சேர்ந்தவர், அதை பாதியில் விட்டுவிட்டு, 1939-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார்.
* ‘பாஞ்சஜன்யா’ என்ற இந்தி வார இதழ், ‘ராஷ்டிரதர்மா’ என்ற இந்தி மாத இதழ், ‘அர்ஜுன்’, ‘ஸ்வதேஷ்’ நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய ‘பாரதிய ஜனசங்கம்’ கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக செயல்பட்டார்.
* நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த 2-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவை கட்சித் தலைவராக 1957 முதல் 1977 வரை இருந்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர்.
* பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு அமைச்சராக அங்கம் வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 6 ஆண்டுகாலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சியில், பொக்ரானில் 5 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
* இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டவர். இவரது ஆட்சிக்காலத்தில், டெல்லி - லாகூர் இடையே பஸ் போக்குவரத்துடன், பாகிஸ்தானுடனான அமைதிக்கான நம்பிக்கையும் துளிர்விட்டது. சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் தவிர்த்து முதல்முறையாக 5 ஆண்டுகள் பதவியில் நீடித்தது இவரது அரசு மட்டுமே.
* மக்களவை உறுப்பினராக 9 முறை, மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை இருந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற விவாதங்களில் இவரது ஆழமான கருத்துகளும், அவற்றை இவர் வெளியிடும் பாங்கும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டன.
* இவரது ஆட்சிக் காலத்தில் தனியார் துறை மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
* பல நூல்கள், கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 1992-ல் பத்மவிபூஷன் விருது பெற்றார். கான்பூர் பல்கலைக்கழகம் இவருக்கு தத்துவத்துக்கான டாக்டர் பட்டம் வழங்கியது. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, லோகமான்ய திலகர் விருது, கோவிந்த வல்லப் பந்த் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நாட்டின் மிக உயரிய ‘பாரத் ரத்னா’ விருது கடந்த ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.
* இயற்கையை நேசிப்பவர், சிறந்த எழுத்தாளர், வசீகரமான பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்படும் ஆளுமையாகப் புகழ் பெற்றவர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால். அரசியல், சமூக செயல்பாடுகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று 93-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT