Published : 16 Aug 2023 08:52 AM
Last Updated : 16 Aug 2023 08:52 AM
புதுடெல்லி: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை என்பது முழுக்க முழுக்க சுயவிளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரைபாதிக்கப்பட்டவர்களின் வேதனையை உணர்ந்து நாட்டை ஒன்றிணைப்பதற்கு பதிலாக முழுவதும் சுயவிளம்பர மோகமாகவே அமைந்துவிட்டது.
திரித்துக் கூறுதல், பொய்கள், மிகைப்படுத்தல், தெளிவற்ற வாக்குறுதிகள் உள்ளிட்டவை பிரதமரின் சுதந்திர தின உரையில் நிரம்பி வழிந்தது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சி காலத்தில் என்ன சாதித்தோம் என்பதை கூற ஒன்றுமில்லை என்பதால் அவரது பேச்சு மக்களை திசைதிருப்பும் நோக்கிலேயே அமைந்தது.
பல மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்து வரும் சூழ்நிலையில் அந்த பேரழிவு குறித்து மிகவும் அரிதாகவே தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், அங்கு ஏற்பட்ட மோசமான அரசின் நிர்வாக தோல்விக்கு பிரதமர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பிரதமர் மோடி திறமையாக செயலாற்றினார் என்பது வெறும் கட்டுக்கதை. போதுமான ஆக்சிஜன் விநியோகம், சரியான நேரத்தில் போதுமான தடுப்பூசிகளை தயார் செய்யதவறியதன் விளைவு இந்தியா 40 லட்சம் பேரை பறிகொடுக்க நேர்ந்தது. உலக சுகாதார அமைப்பு கணிப்பின்படி உலகளவில் அதிகபட்ச கரோனா இறப்பு இந்தியா வில்தான் ஏற்பட்டது.
விலைவாசி உயர்வு: விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் பணவீக்கம், சமூகக் கட்டமைப்புகளை பலவீனமாக்கல் ஆகியவையே மோடியின் சாதனைகளாக விளங்குகிறது.
மோசமான கொள்கைகளால் நாட்டின் வளர்ச்சியை சிதைத்த உண்மைகளை பிரதமர் தனது வாய்ஜாலத்தால் மூடிமறைக்க முடியாது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT