Published : 16 Aug 2023 04:57 AM
Last Updated : 16 Aug 2023 04:57 AM
புதுடெல்லி: ஒரு மாதத்திற்கு முன் கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்கப்பட்டது. இது படிப்படியாக குறைந்து தற்போது சராசரி விலையாக ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் தக்காளி விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் நேபாளத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎப்), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாபெட்) ஆகியவை தக்காளியை கொள்முதல் செய்துள்ளன. இவை லாரிகள் மூலமாக தற்போது கொண்டு வரப்படுகிறது. இவை வட மாநிலங்களில் குறிப்பாக தக்காளி அதிகமாக நுகரப்படும் உ.பி.யில் மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசின் உணவு அமைப்புகளான என்சிசிஎப், நாபெட் ஆகியவை ஆகஸ்ட் 13 வரை 15 லட்சம் டன் தக்காளியை கொள்முதல் செய்து முக்கிய நுகர்வு மையங்களில் மானிய விலையில் விற்பனை செய்துள்ளன. டெல்லி தலைநகரப் பிராந்தியம், மற்றும் ராஜஸ்தான் (ஜெய்ப்பூர், கோட்டா), உத்தரபிரதேசம் (லக்னோ, கான்பூர் வாரணாசி, பிரயாக்ராஜ்), பிஹார் (பாட்னா, முசாபர் நகர், அர்ரா, பக்சார்) ஆகிய மாநிலங்களில் இவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
என்சிசிஎப், நாபெட் ஆகியவை கொள்முதல் செய்த தக்காளியை தொடக்கத்தில் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்தன. பிறகு ஒரு கிலோ ரூ.70 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தக்காளி மானிய விலையை மத்திய அரசு தற்போது ரூ.50 ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT