Published : 15 Aug 2023 12:54 PM
Last Updated : 15 Aug 2023 12:54 PM

பிரதமரின் சுதந்திர தின உரையை மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்து ஏன்? - காங்கிரஸ் விளக்கம்

மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்ததது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "டெல்லி செங்கோட்டையில் நடக்கும் விழாவில் அவர் (மல்லிகார்ஜுன கார்கே) கலந்துகொண்டிருந்தால், தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சிகளைத் தவறவிட்டிருப்பார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் செங்கோட்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அங்கு சென்று சேர்வதற்கு 2 மணிநேரங்கள் பிடிக்கும், அவரால் முன்னதாகவே கிளம்ப இயலாது" என்று விளக்கம் அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. நெறிமுறைகளின்படி நான் 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் மூவர்ணக்கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அதனால் என்னால் அங்கு (செங்கோட்டைக்கு) செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி வேறு இருந்ததது. பிரதமர் வெளியேறுவதுக்கு முன்பாக அவர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை. அதனால் என்னால் நேரத்துக்கு இங்கு வந்திருக்க முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சுதந்திர தின உரை நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, "காங்கிரஸ் கட்சித் தலைவர் இங்கு நடக்கும் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியது இருந்தது. அமைச்சர்கள் உள்ளிட்ட பலரால் செங்கோட்டையை அடையமுடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

கார்கே வெளியிட்ட வீடியோ: பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் எக்ஸ் தளத்தல் வீடியோ செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "கடந்த சில வருடங்களில் தான் நாடு முன்னேற்றம் அடைந்ததாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் செல்லும் போது இங்கு ஒரு துரும்பும் இல்லை. அதற்கு பிறகு பண்டிதர் ஜவகர்லால் நேருவின் முன்னெடுப்பால் இரும்பு எஃகு ஆலைகள், அணைகள் உருவாக்கப்பட்டன. ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவை நிறுவப்பட்டன. இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்து நாட்டை தன்னிறைவு பெறச் செய்தனர். நாட்டில் சிலர் தொழில் நுட்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த போது ராஜிவ் காந்தி தொலைத்தொடர்பு புரட்சியை கொண்டுவந்தார்.

இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு, தன்னாட்சி அமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறேன். சிபிஐ, அலமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்கள் முடக்கப்பட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்கள் முடக்கப்படுக்கின்றன. சிறந்த மனிதர்கள் கடந்த கால வரலாறுகளை அழிப்பதில்லை மாறாக தனக்கென புதிய வரலாறுகளை உருவாக்குகிறார்கள். முன்பு, அச்சே தின் (நல்ல நாள் வரும்) பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள். இன்று அமிர்தகாலம் பற்றி பேசுகிறார்கள். இது அவர்களின் தோல்வியை மறைப்பதற்காக அல்லவா?" இவ்வாறு கார்கே பேசியிருந்தார். அவர் தனது பேச்சில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x