Published : 15 Aug 2023 05:10 AM
Last Updated : 15 Aug 2023 05:10 AM

இமாச்சல பிரதேசத்தில் கனமழைக்கு 50 பேர் உயிரிழப்பு

இமாச்சலபிரதேசம் சிம்லா நகரின் சம்மர் ஹில்ஸ் பகுதியில் நேற்று நிலச்சரிவால் அங்கிருந்த சிவன் கோயில் மண்ணில் புதையுண்டது. அங்கு மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. படம்: பிடிஐ

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இமாச்சலபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச் சரிவால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கன மழையால் சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இங்கு மீட்புப் பணிகளை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆய்வு செய்தார். இங்கு இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். சிம்லாவின் ஃபாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. சிம்லாவின் இந்த இரு இடங்களிலும் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சோலன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் ஜடோன் கிராமத்தில் 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்தனர். பலேரா கிராமத்தில் நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. பானல் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஹமீர்பூர் மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையினால் 3 பேர் உயிரிழந்ததாகவும் இருவரை காணவில்லை எனவும் மாவட்ட உதவி ஆணையர் கூறினார்.

மண்டி மாவட்டம், செக்லி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 3 மீட்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலபிரதேசத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று கூறுகையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனனர். உயிரிழப்பு அதிகரிக்கவாய்ப்புள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார்.

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்திலும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் வெள்ளம் அபாய அளவுக்கு மேல் செல்கிறது. இதுபோல் பிந்தர், நந்தாகினி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் 2 இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

டேராடூன், நைனிடால் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நேற்று கனமழை தொடர்பான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. டேராடூன், சம்பாவத் மாவட்டங்களில் நேற்றுபள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் பெருமளவு சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x