Published : 15 Aug 2023 05:17 AM
Last Updated : 15 Aug 2023 05:17 AM
லக்கிம்பூர் கேரி: உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தலித் சகோதரிகள் இருவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2022 செப்டம்பர் 14-ல் நிகாசன் பகுதியைச் சேர்ந்த இரண்டு மைனர் தலித் சகோதரிகளை கடத்திய கும்பல் அவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்ஸோ மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறை கைது செய்தது. அதில், இருவர் மைனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு 2022 செப்டம்பர் 28-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூடுதல் மாவட்ட நீதிபதி ராகுல் சிங் நேற்று அளித்த தீர்ப்பில் ‘‘நிகாசனில் உள்ள ஒரு கிராமத்தில் கரும்பு வயலின் அருகே ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சகோதரிகளை கொலை செய்த வழக்கில் 4 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளிகளான சுனில் மற்றும் சுனைத் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.46,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
மற்ற இரண்டு குற்றவாளிகளான கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என தெரிவிக் கப்பட்டுள்ளது.
மைனர் குற்றவாளிகள் இருவரில் ஒருவருக்கு தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. ஆறாவது மைனர் குற்றவாளி மீதான வழக்கு விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக போக்ஸோ வழக்கிற்கான சிறப்பு வழக்கறிஞர் பிர்ஜேஸ் பாண்டே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT