Published : 15 Aug 2023 05:33 AM
Last Updated : 15 Aug 2023 05:33 AM
புதுடெல்லி: கிழக்கு லடாக் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ அதிகாரிகளிடையே 19-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2020-ல் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து கிழக்கு லடாக் பகுதிகளில் குவிக்கப்பட்ட படைகளை விலக்குவது மற்றும் அமைதியான சூழலை உருவாக்குவது தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 19-வது சுற்று பேச்சுவார்த்தை திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு, இந்தியாவின் சார்பில் லே பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலியும், சீனாவின் சார்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ தளபதியும் தலைமையேற்றனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுபகுதியில் இந்திய எல்லையொட்டிய சுஷுல்-மோல்டோ என்ற இடத்தில் இந்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பு நடைபெற்ற 18-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா கடுமையான அழுத்தம் கொடுத்தது. இருப்பினும், முழுமையாக படைகளை சீன ராணுவம் திரும்பப் பெறாத நிலையில் 19-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவாத வரையில் சீனாவுடனான உறவு சுமுகமானதாக இருக்க முடியாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT