Published : 14 Aug 2023 08:11 AM
Last Updated : 14 Aug 2023 08:11 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் சிறுவர்கள் மீது சிறுத்தை தாக்குதல் 2 முறை நடைபெற்றதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, அலிபிரி மற்றும் வாரி மெட்டு ஆகிய இரு மார்க்கங்களிலும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை கும்பலாக பக்தர்களுடன் செல்லலாம்; காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பைக்குகள் அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கவுஷிக் (3) எனும் சிறுவனை அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை கவ்வி சென்றது. பின்னர் பக்தர்களின் கூச்சலால் அந்த சிறுவன் மீட்கப்பட்டான்.
இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. முதல் சம்பவம் நடந்த போதே தேவஸ்தானம் உஷாராகி நடைபாதையின் இரு புறமும் வேலி அமைத்திருந்தால் லக்ஷிதா உயிரிழந்திருக்க மாட்டாள் என்பது பக்தர்களின் குமுறலாக உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை திருமலையில் இருந்து திருப்பதி வரும் முதல் மலைப்பாதையில் 38-வது வளைவிலும், மற்றும் அலிபிரி - காளி கோபுரம் , லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே என சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் சில பக்தர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் அதனை வனப்பகுதிக்குள் துரத்தி விட்டதாக தெரிவிக்கின்றனர். அந்த சிறுத்தையைபிடிக்க 2 இடங்களில் கூண்டுஅமைக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
ஆதலால், சிறுத்தை சிக்கும் வரை அலிபிரி மற்றும் வாரி மெட்டு மார்க்கங்களில் பக்தர்களின் பாதுகாப்புக்காக சில முக்கிய நிபந்தனைகளை அமல்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT