Published : 16 Nov 2017 09:12 AM
Last Updated : 16 Nov 2017 09:12 AM
அலர்மேலு மங்காபுரம் என்றழைக்கப்படும் திருச்சானூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இம்மாதம் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய வேளைகளிலும் தாயார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
நேற்று காலை தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் முன்னிலையில், தங்க கொடி மரத்தில் கஜ முத்திரை பதித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது 7 ராகங்கள் இசைக்கப்பட்டன. மேள தாளங்கள் முழங்க, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாலையில் ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அமர்நாத் ரெட்டி, பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கினார். இரவில் சின்ன சேஷ வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வாகனத்தின் முன் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்களும், பெரிய, சின்ன ஜீயர் சுவாமி குழுவினரும், மற்றும் பல்வேறு மாநில நடன கலைஞர்களும் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT