Published : 14 Aug 2023 04:51 AM
Last Updated : 14 Aug 2023 04:51 AM

நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்: செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார் பிரதமர்

கோப்புப்படம்

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.

நாளை சுதந்திர தின விழா நடைபெறும் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 26 முதல் செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு: பட்டங்கள், பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை கண்டறியும் அதிநவீன ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை வளாகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உளவுத் துறை: எச்சரிக்கை மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குகி இன மக்கள் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தை சேர்ந்த போராட்டக் குழுவினர் சுதந்திர தின விழாவின்போது டெல்லியில் குவிந்து போராட்டம் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், விவசாயிகள் தரப்பில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு, டெல்லியில் பேருந்து, ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை காலை தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். முன்னதாக, செங்கோட்டைக்கு வரும் அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து செல்வார்கள். பாதுகாப்பு படை வீரர்களின் மரியாதை உள்ளிட்ட சம்பிரதாய நடைமுறைகளுக்கு பிறகு பிரதமர் கொடியேற்றுவார்.

கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி 10-வது முறையாக அவர் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். அவர் கொடி ஏற்றுவதற்கு, மேஜர் நிகிதா நாயர், மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் உதவுவார்கள். அப்போது 21 குண்டுகள் முழங்கப்படும்.

பின்னர், உள்நாட்டு தயாரிப்பான மார்க்-3 துருவ் ரகத்தை சேர்ந்த 2 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்படும்.

விவசாயிகள் பங்கேற்பு: பிறகு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரையின் முடிவில், தேசிய மாணவர் படையினர் தேசிய கீதம் பாடுவார்கள். இந்த விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 1,800 பேர் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க எம்.பி.க்கள் ரோ கன்னா, மைக்கேல் வாட்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும் பங்கேற்கின்றனர்.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. செப்டம்பரில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்க உள்ளது. இதையொட்டி, செங்கோட்டையில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களின் ஒரு பகுதியாக ஜி-20 சின்னமும் இடம்பெற்றுள்ளது.

‘எனது மண், எனது தேசம்’: கடந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின்போது ‘எனது மண், எனது தேசம்' இயக்கத்தை பிரதமர் அறிவித்தார். இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் அந்தந்த பகுதிகளின் மண், மரக்கன்றுகளுடன் தலைநகர் டெல்லியை நோக்கி அமுத கலச யாத்திரை நடத்தப்படும். இந்த கலசங்களில் கொண்டு வரப்படும் மரக்கன்றுகளை டெல்லி தேசிய போர் நினைவிடத்தின் அருகில் நட்டுவைத்து, மிகப்பெரிய அமுத பூங்கா உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த 9-ம் தேதி ‘எனது மண், எனது தேசம்' இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அந்தந்த பகுதிகளின் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவாக அவர்களது கிராமங்கள், நகரங்களில் கல்வெட்டு நிறுவப்படும்’’ என்று தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x